கோலாலம்பூர், ஜனவரி.14-
லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மற்றும் முறைகேடுகளில், புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை, இனி, சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவுள்ளது.
இந்த புதிய அணுகுமுறையானது, மனித உரிமைகளை மதிக்கும் சட்ட அமலாக்கத்தை கடைபிடித்தவாறே செயல்படுத்தப்படும் என்று புதிதாகப் பதவியேற்றுள்ள அதன் இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹஸ்புல்லா அலி தெரிவித்துள்ளார்.
அமலாக்க அதிகாரிகள், பொதுமக்களை மரியாதையுடன் அணுக வேண்டுமே தவிர, பயத்தை விதைக்கக் கூடாது என்றும் முஹமட் ஹஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டுமென்றால், அங்கு நேர்மையும், தொழில்முறையும் எந்த வித சமரசமும் செய்யப்படக் கூடாது என்றும் முஹமட் ஹஸ்புல்லா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், போக்குவரத்து அமலாக்கம் என்பது தண்டனை நடவடிக்கைகளை மட்டுமே நம்பியிருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், அவை இனி பாதுகாப்பு விழிப்புணர்வை சார்ந்து இருக்க வேண்டும் என்று முஹமட் ஹஸ்புல்லா, போக்குவரத்துத் துறை உயர்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.








