கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-
பகடிவதைச் சம்பவங்கள் முழு வீச்சில் ஒடுக்கப்படுவதற்கு ஆரம்பப் பள்ளியிலேயே பகடிவதைத் தடுப்புப் பிரச்சாரங்கள் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என்று மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
ஆரம்பப் பள்ளியிலிருந்து பகடிவதைக் கலாச்சாரம் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் சக மாணவர்கள் மீதான பரஸ்பர மரியாதை மற்றும் அன்பின் மகத்துவம் முதலிய பண்பியலை இழந்த ஒரு தலைமுறை உருவாகக்கூடிய அபாயம் இருப்பதாக மாமன்னர் வலியுறுத்தினார்.
பகடிவதைச் சம்பவங்கள், பாதிக்கப்பட்டவர்களின் மனம் மற்றும் உடல் ரீதியாக அவர்களின் நல்வாழ்வைப் பாழ்படுத்துவதுடன் பல்வேறு துயரங்களும் இடர்களும் தோன்றுவதற்கு வழிவகுக்கின்றன என்று மாமன்னர் குறிப்பிட்டார்.
பகடிவதைத் தடுப்பு மீதான பிரச்சாரங்களை மாணவர்கள் மத்தியில் சிறு வயதிலிருந்து தொடங்கினால் மட்டுமே பரஸ்பர மரியாதை மற்றும் கட்டொழுங்கு மகத்துவத்தின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று மாமன்னர் இன்று தமது முகநூலில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.








