கோலாலம்பூர், ஆகஸ்ட்.08-
வரும் 2028 ஆம் ஆண்டில் அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கும் உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் மலேசியா குறைந்தபட்சம் ஒரு தங்கப் பதக்கம் வெல்வதைக் காண விரும்புவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கத்தை வெல்ல வேண்டும் என்பது மலேசியாவின் நீண்ட நாள் கனவாக, எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அந்த எதிர்ப்பார்ப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, மலேசிய தேசிய அணியினர், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியைச் சிறந்த ஒரு களமாக, வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
மலேசியா குறைந்தபட்சம் ஒரு தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற பெரும் பொறுப்பும் கனவும், இளைஞர், விளையாட்டுத்துறை துறை அமைச்சர் ஹன்னா இயோ மற்றும் மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் டான் ஶ்ரீ முகமட் நோர்ஸா ஸாகாரியா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதையும் டத்தோ ஶ்ரீ அன்வார் நினைவு கூர்ந்தார்.
இதற்கான முன்முயற்சித் திட்டங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.








