நாட்டின் இரயில் இணைப்பை வலுப்படுத்தவும், பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கவும் அரசாங்கம் தொடர்ந்து உறுதியுடன் செயற்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.


ஜெமாஸ் - மெந்தாகாப் இரயில் பாதை தொகுப்பு பிரிவு A மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளின் நிறைவு விழாவில் உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார். பிப்ரவரி 2016 இல் வழங்கப்பட்ட இப்பணி, அசல் ஒப்பந்தக்காரரின் தோல்வியால் தடைபட்ட நிலையில், 12 ஆவது மலேசியா திட்டத்தின்கீழ் மறு ஒப்பந்த கோருதல் முறைமூலம் பொறுப்பேற்கப்பட்டு கடந்த ஜூன் 19 அன்று மொத்தம் RM41.7 மில்லியன் செலவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.


மேலும், ஜெமாஸ் - தும்பாட் இரயில் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மொத்தம் மூன்று தொகுப்புகள் உள்ளதாகவும், அதில் தொகுப்பு பிரிவு A மற்றும் பிரிவு B முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதாகவும், தொகுப்பு பிரிவு C தற்பொழுது நடைமுறையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.











