Jan 14, 2026
Thisaigal NewsYouTube
வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையைப் போற்றுவோம் – மலேசியத் தமிழர்களுக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பொங்கல் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையைப் போற்றுவோம் – மலேசியத் தமிழர்களுக்குப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பொங்கல் வாழ்த்து

Share:

கோலாலம்பூர், ஜனவரி.14-

நாளை ஜனவரி 15 கொண்டாடப்படவிருக்கும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, மலேசியாவிலுள்ள இந்தியச் சமூகத்திற்கு, குறிப்பாகத் தமிழ் மக்களுக்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

விளைச்சலின் பலனாகக் கிடைத்த செழிப்புக்கு நன்றி செலுத்தும் விதமாகத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் நாட்காட்டியின்படி 'தை' மாதம் பிறப்பதைக் குறிப்பதோடு, பலராலும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாகவும் கொண்டாடப்படுகிறது என பிரதமர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையைத் தங்களது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் மக்கள் மகிழ்ச்சியாகவும், நல்லிணக்கத்துடனும், அர்த்தமுள்ளதாகவும் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

"நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள், மாறுபட்ட பின்னணிகள் அல்லது வெவ்வேறு நிலைப்பாடுகள் இருந்தாலும், ஒருவரையொருவர் புரிந்து கொள்வதும் மதிப்பதுமே பன்முகத்தன்மை கொண்ட நம் சமுதாயத்தின் பிணைப்பாகவும், நாட்டின் ஒற்றுமையின் பலமாகவும் உள்ளது" என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அமைதி மற்றும் வளம் மிக்க ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப, மக்களிடையே நிலவும் இந்த ஒற்றுமை உணர்வு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தனது செய்தியின் நிறைவாக, "அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாகத் தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்" என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Related News