ஜோகூர் பாரு, ஜூலை.20-
போதையில் இருந்ததாக நம்பப்படும் பாகிஸ்தான் ஆடவர் ஒருவர், தான் செலுத்தியக் காரை ஓர் உணவகத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
உணவகத்தில் மோதிய அடுத்த கணமே அந்த அந்நிய நாட்டு ஆடவர், காரை விட்டு வெளியேறி, உணவகத்தைச் சுற்றியுள்ள இரண்டு மீட்டர் உயரம் கொண்ட மதில் சுவரில் ஏறி தப்பி ஓடி விட்டார்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஜோகூர் பாரு, ஜாலான் ரியாங் உத்தாமாவில் உள்ள ஓர் உணவகத்தில் நிகழ்ந்தது என்று ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
அந்த ஆடவர் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, உணவகத்தில் பாய்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்தது.
உணவகத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார் ஒன்றை அந்த நபரின் கார் மோதியது. தன்னைப் பிடிப்தற்கு உணவகத்தில் ஆட்கள் ஓடி வருவதைக் கண்டு அந்த பாகிஸ்தான் ஆடவர் தப்பி ஓடி விட்டதாக ரவூப் செலாமாட் குறிப்பிட்டார்.








