May 21, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலைத் திருத்தலத்தின் 133 ஆவது தைப்பூச விழா
தற்போதைய செய்திகள்

பத்துமலைத் திருத்தலத்தின் 133 ஆவது தைப்பூச விழா

Share:

முருகப்பெருமானின் உற்சவத் திருநாளான தைப்பூச விழா வரும் ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படும் வேளையில் நாட்டின் தாய்க் கோயிலான கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திற்கு உட்பட பத்துமலை திருத்தலத்தில் தைப்பூச விழா ஏற்பாடுகள் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்தார்.

பத்துமலைத்திருத்தலத்தில் 133 ஆவது தைப்பூச விழாவையொட்டி கோயில் தேவஸ்தானம் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னேற்பாடுகளை செய்து வருவதாக இன்று பத்துமலை திருத்தலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான கோலாலம்பூர்,ஜாலான் துன் ஹ்.எஸ் லீ யில் வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலில் ஜனவரி 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூசைகள் நடைபெற்று இரவு 9 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி, வண்ண விளக்குகளாலும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இரதத்தில் எழுந்தருளி, மங்கள மேளம் நாதஸ் இசை முழங்கி, பக்தர்கள் புடை சூழ, வழக்கமான சாலைகளைப் பின்பற்றி பத்துமலையை நோக்கிப் பயணிப்பார் என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

மறுநாள் ஜனவரி 24 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சேவல் கொடி ஏற்றத்துடன 2024 ஆம் ஆண்டுக்கான தைப்பூச விழா முருகப்பெருமான் அருளுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.

ஜனவரி 25 ஆம் தேதி தைப்பூசத்தன்று காலை 7.00 மணியளவில் சுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளி நதிக்கரையில் பக்தர்களுக்குத் தீர்த்தோற்சவக் காட்சி வழங்கியருள்வார்.

தொடர்ந்து தங்கவேல் புறப்பட்டு, மேற்குகை வேலாயுதர் கோயிலில் சிறப்பு பூசைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவிற்கான காவடி, பால்குடம் உள்ளிட்டு நேர்த்திக் கடன்களை செலுத்தும் நிகழ்வுகள் கோலாகலமாக ஆரம்பமாகும்.
தைப்பூச விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் மிக நேர்த்தியாக செய்து வருவதாக டான்ஸ்ரீ நடராஜா விவரித்தார்.

பத்துமலைத் தைப்பூசத்தில் பெருமளவிலான பக்தர்கள் கூடுவார் என்பதால் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு 2 ஆயிரம் போலீஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுவதற்கு அரச மலேசியப் போலீஸ் படை ஒத்துழைப்பு நல்கியுள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

Related News