கோலாலம்பூர், ஜனவரி.12-
நாடெங்கிலும் இன்று திங்கட்கிழமை, புதிய கல்வியாண்டில் காலடி எடுத்து வைத்து, மீண்டும் பள்ளிக்குத் திரும்பும் மாணவர்களுக்கு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய கல்வியாண்டானது மாணவர்களுக்கு முக்கியமான ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டுள்ள அன்வார், எதிர்காலத்திற்கான நம்பிக்கைகள் மற்றும் லட்சியங்களுடன் பள்ளியில் தங்களது முதல் அடியை எடுத்து வைக்கும் மாணவர்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வழிகாட்டுவதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அன்வார், வீட்டில் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக அவர்கள் நடந்து கொண்டு, தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் தங்களது வாழ்வில் கற்கும் ஒவ்வொரு பாடமும் மதிப்பும், அவர்களை நல்ல குணமும், அறிவும் கொண்டவர்களாக வடிவமைத்து, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குப் பங்காற்றும் குடிமக்களாக உருவாக்கும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.
ஆண்டு இறுதி விடுமுறைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களில் உள்ள குரூப் ஏ பள்ளிகளில் நேற்று வகுப்புகள் தொடங்கின.
இந்நிலையில், மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.








