பொந்தியான், பிப்ரவரி.15-
மலேசியாவில் மாவட்ட அளவில் நீண்ட காலமாகத் தள்ளிப் போகும் சிறு திட்டங்களையும் பாதியில் நிற்கும் பணிகளையும் இந்த ஆண்டுக்குள் விரைந்து முடிக்க அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்கள் குறித்து மாவட்ட அதிகாரிகள் ஒரு மாத காலத்திற்குள் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகள் பல ஆண்டுகள் தாமதமாவது ஏற்கத்தக்கதல்ல என்றும், இதற்கான காரணங்களைக் கண்டறிய அதிகாரிகள் நேரடியாகக் களமிறங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திட்டங்களைச் சரியான நேரத்தில் முடிக்க புதிய கண்காணிப்பு முறைகளையும், தகுதியான ஒப்பந்ததாரர்களைத் தேர்வு செய்யும் நடைமுறைகளையும் அரசு கையாளத் திட்டமிட்டுள்ளது. நிர்வாகத்தின் வெற்றி என்பது வெறும் புள்ளி விவரங்களில் இல்லை, அது மக்களுக்குச் சேர வேண்டிய உதவிகளிலும் மேம்பாடுகள் எவ்வளவு விரைவாகச் சென்றடைகிறது என்பதிலும்தான் உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார். வறுமை ஒழிப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதால், அனைத்துத் திட்டங்களையும் திறம்படச் செயல்படுத்தி அடிமட்ட மக்களுக்கும் அதன் பயன்கள் கிடைப்பதை அரசாங்கம் உறுதிச் செய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.








