பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.31-
வளர்ச்சி குன்றிய ஆட்டிசம் சிறுவனான தனது 5 வயது மகன் ஸாயின் ராயன் அப்துல் மாதின் மரணம் தொடர்பில் அந்தச் சிறுவனை வேண்டுமென்றே புறக்கணித்த குற்றத்திற்காக அவனது தாயாருக்கு பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதின்றம் இன்று 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
30 வயது இஸ்மானிரா அப்துல் மானாஃப் என்ற அந்த மாது, இரண்டு ஆண்டு நன்னடத்தையில் இருக்க வேண்டும் என்பதுடன் 6 மாதக் காலக் கட்டத்தில் 120 மணி நேரம் சமூகச் சேவையில் ஈடுபட வேண்டும் என்று நீதிபதி டாக்டர் ஷாலிஸா உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் இஸ்மனிராவும் அவரின் கணவர் 30 வயது ஸாயிம் இக்வான் ஸஹாரியும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இருப்பினும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் கடந்த ஜுலை 21 ஆம் தேதி இஸ்மனிராவின் கணவர் ஸாயிம் இக்வான் விடுதலை செய்யப்பட்டார்.
இன்றையத் தீர்ப்பில் சிறுவனின் தாயார் இஸ்மனிராவை உடனடியாக காஜாங் சிறைச்சாலைக்குக் கொண்டுச் செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆட்டிசன் சிறுவன் ஸாயின் ராயனின் மரணத்திற்குக் காரணங்கள் கண்டறிய முடியாத நிலையில் இறுதியில் அவனது தந்தையையும், தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஸாயின் ராயனின் உடல், பின்னர் பிளாக் R, பங்சாபுரி இடாமான் டாமான்சாரா டாமாய் நீரோடை அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஸாயின் ராயன் உடலில் காயங்கள் ஏற்படும் அளவிற்கு அவனை வேண்டுமென்றே புறக்கணித்ததாக தாயார் இஸ்மனிரா மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.








