கிள்ளான், நவம்பர்.08-
கிள்ளான் புக்கிட் திங்கியில் உள்ள எண்ணெய் நிலையம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்ட ஓர் ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான அந்த நபர் மரணமுற்றதை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் உறுதிப்படுத்தினார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நேற்றிரவு 11.13 மணியளவில் பொதுமக்களிடமிருந்து போலீசார் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு வேலையற்றவரான அந்த 34 வயது நபர் கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். தனது காருக்கு எண்ணெய் நிரப்ப தனது மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண்ணுடன் வந்த போது, இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
காரில் இருந்த பெண், எண்ணெய் ஊற்றுவதற்குக் கட்டணம் செலுத்த எண்ணெய்க் கடைக்கு சென்ற வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தை நடத்தியதாக டத்தோ ஷாஸெலி குறிப்பிட்டார்.
காரின் முன்புறம் கண்ணாடியில் அந்த நபரை நோக்கிச் சந்தேகப் பேர்வழிகள் மூன்று நான்கு முறை துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகம் நடத்தியுள்ளனர் என்று தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வயிற்றிலும், மார்பிலும் தோட்டா பாய்ந்த நிலையில் காருக்குள்ளேயே குற்றுயிரும் குலையுயிருமாக, கிடந்த அந்த நபர், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கிள்ளான் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்ததாக டத்தோ ஷாஸெலி குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதற்கு முன்பு வந்த தகவலின்படி, உயிரிழந்த நபருக்கு பல்வேறு குற்றவியல் பதிவுகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக 2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் அவர் தேடப்பட்டு வந்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்லி காசா தெரிவித்துள்ளார்.








