கிள்ளான், நவம்பர்.14-
கோலக்கிள்ளான், பண்டமாரான், கம்போங் ஜாலான் பாப்பான் குடியிருப்புப் பகுதியில் வீடுகள் உடைக்கப்பட்ட விவகாரத்தில் சூழ்ந்துள்ள சர்ச்சையில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலையிட வேண்டும் என்று கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.
நீண்ட காலக் குடியிருப்பாளர்களான கம்போங் ஜாலான் பாப்பான் மக்களின் பிரச்னையில் பிரதமர் தலையிடவில்லை என்றால் பக்காத்தான் ஹராப்பானின் நம்பகத்தன்மை குறையக்கூடும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ நினைவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் போல் வீடுகளை வழங்குவதற்கான நீண்ட கால உறுதிப்பாட்டை நிறைவேற்ற சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.
கம்போங் ஜாலான் பாப்பான் வீடு உடைப்பு பிரச்னை தொடர்பான தகராறு அச்சத்தை தோற்றுவிக்கும் காட்சியாக மாறியுள்ளது. போலீசாரின் ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு பிரதமர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இது வெறும் சிலாங்கூர் மாநில பிரச்னை அல்ல. நாம் எப்படிப்பட்ட ஒரு நாடாக மாறி வருகிறோம் என்பதற்கான ஒரு சோதனையாகும் என்று பிரதமருக்கு எழுதிய திறந்த மடலில் சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தியுள்ளார்.








