சிரம்பான், ஜூலை.13-
பேருந்துகளில், குறிப்பாக விரைவுப் பேருந்துகளிலும், சுற்றுலாப் பேருந்துகளிலும் இருக்கைப் பட்டை - சீட் பெல்ட் அணிவது வெறும் விதிமுறை மட்டுமல்ல, விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளையும் கடுமையான காயங்களையும் குறைப்பதற்கானப் பாதுகாப்பு நடவடிக்கை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் வலியுறுத்தியுள்ளார். சீட் பெல்ட் அணியாததுதான் பல விபத்துக்களில் பயணிகள் வெளியே தூக்கி எறியப்பட்டு உயிரிழக்க முக்கியக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
விமானப் பயணங்களில் சீட் பெல்ட் அணிவதை அனைவரும் ஏற்றுக் கொண்டதைப் போலவே, பேருந்துகளிலும் இதைச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சாலைப் போக்குவரத்துத் துறை ஜேபிஜே அதிகாரிகள் பயணிகளைப் போல மாறுவேடத்தில் சென்று சீட் பெல்ட் பயன்பாட்டைத் தீவிரமாகக் கண்காணிப்பார்கள் என்றும், பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்துவது அவர்களின் பொறுப்பு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.








