கோலாலம்பூர், ஜூலை.26-
மலாய்க்காரர் அல்லாதோரின் நாட்டுப் பற்றைக் கேள்விக்குட்படுத்தும் இனவாத அரசியலை பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள், குறிப்பாக கெடா மந்திரி பெசார் சனுசி முகமது நோர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜசெக தேசியத் தலைவரும் இலக்கவியல் அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனுசியின் சமீபத்திய கருத்துகள் மலேசியாவின் பல்லின ஒற்றுமைக்கும் கூட்டரசு அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கும் எதிரானவை என்றும், கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசிய இந்தியர்கள் உள்ளிட்ட மலாய்க்காரர் அல்லாத சமூகங்கள் இந்த நாட்டின் சம உரிமையுடைய குடிமக்கள் என்பதால், அவர்களின் நாட்டுப்பற்றை கேள்விக்குட்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத இனவாதச் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைப்பதற்குப் பதிலாக இன உணர்வுகளைத் தூண்டும் அரசியலில் பெரிக்காத்தான் நேஷனல் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இனவாத அரசியலை மக்கள் நிராகரித்து, பல்லின ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கோபிந்த் சிங் டியோ அழைப்பு விடுத்துள்ளார்.








