சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே, மைஇஜி செண்டிரியான் பெர்ஹாட், மற்றும் ஸெட்ரிக்ஸ் ஏஐ பெர்ஹாட் நிறுவனங்களை தனது வசூல் முகவர்களாகச் செயல்படுவதிலிருந்து அக்டோபர் 5ஆம் தேதி அதிகாலை 12.01 மணி முதல் இடைநீக்கம் செய்துள்ளது.
ஜேபிஜே தலைமை இயக்குநர் ஏடி ஃபாட்லி ரம்லி கூறுகையில், ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் நிறுவனங்களின் நிறைவேற்றப்படாத கடமைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதனால் மைஇஜி குருப் மூலம் வழங்கப்பட்டு வந்த அனைத்து ஜேபிஜே சேவைகளும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இடைநிறுத்தப்படும்.
எனினும், ஜேபிஜேயின் அதிகாரப்பூர்வ மற்றும் மாற்று வழிகள் மூலம் சேவைகள் வழக்கம்போல் தொடரும் என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஸெட்ரிக்ஸ் ஏஐ நிறுவனம் ஜேபிஜேவுக்கு 200 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. வாகன சாலைவரி, ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு மற்றும் போக்குவரத்து அபராதங்களுக்காக வசூலித்த தொகையை செலுத்தத் தவறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








