பத்துமலைத் திருத்தலத்தில் 133 ஆவது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கோலாலம்பூர், துன் எச் எஸ் லீ சாலையில் வீற்றிருக்கும் நாட்டின் தாய்க்கோயிலான அன்னை ஸ்ரீ மகாமாரியம்மன் கோவிலில் நாளை ஜனவரி 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு சிறப்பு பூசைகளுக்கு பிறகு அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி, வெள்ளி இரதத்தில் பத்துமலைத் திருத்தலத்தை நோக்கி புறப்படுவார் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இரதத்தில் முருகன்பெருமான் எழுந்தருளி, மங்கள மேளம் நாதஸ்வரம் இசை முழுங்கிட பக்தர்கள் புடை சூழ பத்துமலையை நோக்கி பயணிப்பார்.
வெள்ளித் தேரில் முருகப் பெருமான் பிரதான வீதிகள் ஊடாக நகர் உலா வரும் போது பக்தர்கள் வழி நெடுகிலும் அலங்காரப் பந்தல்கள் மற்றும் தண்ணீர் பந்தல்கள் அமைத்தும், கும்பங்கள் வைத்தும், முருகப்பெருமானை பக்தியோடு வரவற்பர். கூடவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி வருவர் என்று டான்ஸ்ரீ நடராஜா விவரித்தார்.
இத்தைப்பூச திருவிழாவில் தமிழர்கள் அனைவரும் சமய நெறிமுறைகளை வழுவாது கட்டிக்காத்து, பத்துமலைத் தைப்பூச விழா சிறக்க பக்தர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் தேவஸ்தானம் நாடுவதாக டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.








