குவாந்தான், அக்டோபர்.12-
பகாங், குவாந்தான் வட்டாரத்தில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், ஒரு பெண் உட்பட நான்கு காவற்படை அதிகாரிகள் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புக்கிட் அமான் ஒருமைப்பாடு மற்றும் தரநிலைகள் இணக்கத் துறை, அதிகாலை 2.30 மணியளவில் இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், பகாங்கில் உள்ள ஒரு மாவட்ட காவற்படைத் தலைமையகத்தில் பணிபுரியும் நான்கு அதிகாரிகள் அந்த விடுதியின் karaoke அறையில் பிடிபட்டனர் என பகாங் மாநிலக் காவற்படையின் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் உறுதிப்படுத்தினார்.
பிடிபட்டவர்களின் மீது நடத்தப்பட்ட ஆரம்பச் சோதனையில் அவர்கள் போதைக்கு அடிமையாகி இருந்தது உறுதியானது. இந்தச் சம்பவம் மலேசியக் காவற்படையின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, போதைப் பொருள் அபாயகரச் சட்டம் 1952-இன் கீழ் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக யஹாயா ஓத்மான் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்த விடுதியில் போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும், நான்கு பேரும் வாக்குமூலம் அளித்த பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.








