கோலாலம்பூர், ஜூலை.11-
பார்வைக் குறைபாடுடைய மலேசியர்களைப் பயன்படுத்தி, பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்த வெளிநாட்டுச் சட்டவிரோதக் கும்பல் ஒன்றை மலேசியக் குடிநுழைவுத் துறை அதிரடியாக ஒடுக்கியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கோலாலம்பூர் ஜாலான் டாங் வாங்கி மற்றும் ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், 29 முதல் 56 வயதுடைய ஐந்து இந்தோனேசியப் பெண்கள் கைது செய்யப்பட்டதாகக் குடிவரவு நுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மாற்றுத் திறனாளி மலேசியர்களை, மக்கள் நடமாட்டம் மிகுந்த உணவகங்களுக்குக் கூட்டிச் சென்று, தம்பதியர் போல நடித்துப் பொதுமக்களின் அனுதாபத்தைப் பெற்றுப் பிச்சை எடுத்து வந்துள்ளனர்.
பணத்திற்குப் பதிலாக திசு தாள்களை வழங்கி, வியாபாரம் செய்வது போல இக்கும்பல் ஒரு இரவுக்கு 100 முதல் 200 ரிங்கிட் வரை சம்பாதித்து வந்ததும், கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தங்களின் விசா விதிமுறைகளை மீறியதும், மற்றவர்கள் முறையான பயண ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் விவரித்தார்.








