குடும்பத்தோடு உல்லாசமாக விடுமுறையைக் கழிப்பதற்காக, போர்டிக்சன் கடற்கரைக்குச் சென்ற ஒரு குடும்பத்தின் நிலை, துயரத்தில் முடிந்தது. மாலை 5.30 மணி அளவில் போர்டிக்சன் பகுதியில் அமைந்துள்ள பந்தாய் சஹாயா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19, 29 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க சத்தியதேவி, தேவகி, கலைவானி என்ற 3 சகோதிரிகள் கடலில் மூழ்கி மாண்டனர்.
அவர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 26 வயது வீரன் மற்றும் 29 வயது சத்தீஸ்வரன் பொது மக்களால் காப்பாற்றப்பட்டு தொடர் சிகிச்சைக்காக போர்டிக்சன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெலுக் கெமாங் தீயணைப்பு மற்றும் மீட்புபணி நடவடிக்கை குழுவின் கொமண்டர் அஸிஸீ அலியாஸ் தெரிவித்தார்.
நேற்று மாலை 5 மணி தொடங்கி கடலில் சிறிய அளவிலான கொந்தளிப்பு ஏற்பட்டதாகவும் அச்சமயத்தில் கடல் பெருக்கு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் பந்திங் பகுதியைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தினர் குளித்து கொண்டிருக்கும் பொழுது கடல் நீரின் அழுத்ததால் இழுக்கப்பட்டு அவர்கள் மூழ்கி இறந்திருக்கக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார். அதே சமயம் அந்தக் குடும்பத்தினர் குளித்துக் கொண்டிருந்த பகுதி அபாயகரமான பகுதியாகவும் அங்கு குளிக்க அனுமதிக்கப்படாத பகுதியாக அறிவித்திருந்த நிலையில் அவர்கள் அங்கு குளித்துள்ளார்கள் என அஸிஸீ அலியாஸ் மேலும் விளக்கினார்.
எனினும் மேல் விசாரணைக்காக இறந்த மூன்று சகோதரிகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக போலீசாரிடம் ஒப்ப்டைக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.








