ஷா ஆலாம், பிப்ரவரி.19-
ஷா ஆலம், செக்ஷன் 7-இல் சிவப்பு நிற பெரோடுவா ஆக்சியா காரில் வந்து, கத்தியைக் காட்டி ஒரு பெண்ணின் கைப்பையைத் திருடிய கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் அடுத்த சில மணி நேரங்களில் கைது செய்தனர்.
இது குறித்து ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்சே எம்போல் கூறுகையில், இந்தச் சம்பவத்தில் இந்தோனேசியப் பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் கத்தியைக் காட்டி கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
"பாதிக்கப்பட்ட பெண் செக்ஷன் 7, ஜாலான் பிளம்பம், அருகே உள்ள ஒரு குறுக்கு சாலையில் குப்பைகளைக் கொட்டுவதற்காகத் தனியாகச் சென்று கொண்டிருந்த போது, ஒரு கும்பல் அவரை அணுகிக் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கைப்பையைப் பறித்துக் கொண்டு தப்பியோடியது என்று ரம்சே எம்போல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் அடிப்படையில், ஷா ஆலம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். அன்றிரவு 9 மணியளவில், இக்குற்றத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 6 மலேசியர்களைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.








