கோலாலம்பூர், டிசம்பர்.29-
கோலாலம்பூரில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை பெயர் மாற்றம் செய்தது மற்றும் விளம்பரப் பலகை குத்தகை தொடர்பில் 5 மில்லியன் ரிங்கிட் மற்றும் லம்போர்கினி சொகுசுக் காரை லஞ்சமாகப் பெற்றதாகக் சந்தேகிக்கப்படும் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
2021 மற்றும் 2022-ஆம் ஆண்டு காலக் கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்குச் சாதகமாகச் செயல்பட அந்த முன்னாள் அமைச்சர் 5 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தை இரண்டு தவணைகளாகப் பெற்றதாகவும், கூடுதலாக ஒரு லம்போர்கினி காரைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த முன்னாள் அமைச்சர் நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.








