தமது தந்தையை பாராங்கினால் கழுத்து அறுத்து கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஆடவர் ஒருவருக்கு புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது.
தூக்குத் தண்டனைக்கு பதிலாக அந்த நபருக்கு 35 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ வசீர் அலாம் மைடின் மீரா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
முஹமாட் நஸ்ரி அப்துல்லா என்ற அந்த நபர், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுலை 2 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் நெகிரி செம்பிலான், பன்டார் ஶ்ரீ ஜெம்போல், ஃபெல்டா லூய் திமூர் என்ற நிலக்குடியேற்றப் பகுதியில் 76 வயதுடைய தமது தந்தை எஸ். வேலாயுதத்தை பாராங்கினால் வெட்டிக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
அந்த நபருக்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்த வேளையில் தற்போது அத்தண்டனை முறை அகற்றப்பட்டு விட்டதால், 35 ஆண்டு சிறைத் தண்டனையாக மாற்றப்படுவதாக கூட்டரசு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.








