கோலாலம்பூர், ஜனவரி.23-
தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் பெறப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் நிதிக்கும், சவுதி நன்கொடைகளுக்கும் தொடர்பு இல்லையென முன்னாள் பிரதமத் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
SRC மற்றும் அதன் துணை நிறுவனமான Gandingan Mentari Sdn Bhd ஆகியவற்றால் நஜிப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கில், SRC International Sdn Bhd-ன் வழக்கறிஞர் Kwan Will Sen உயர்நீதிமன்றத்தில் நடத்திய குறுக்கு விசாரணையின் போது, நஜிப் இதனைத் தெரிவித்தார்.
அந்த நிதியானது சவுதி அரேபியாவின் நன்கொடை என அந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் நினைத்தாக தெரிவித்த நஜிப்பிடம், குறுக்கு விசாரணை செய்த Kwan Will, அப்படியென்றால் அந்த நிதிக்கும், சவுதி நன்கொடைக்கும் தொடர்பில்லை என நாங்கள் கருதலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த நஜிப், எனது புரிதலின் அடிப்படையில் ஆம் என்று தெரிவித்தார்.
1MDB வழக்கில் அண்மைய தீர்ப்பில், நஜிப் தனது 'சவூதி நன்கொடை' என்ற தற்காப்பு வாதத்தை ஆதரிக்க அவரிடம் ஆவணப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட இந்த சிவில் வழக்கானது, SRC இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் நிதிக்கு நஜிப்பே பொறுப்பானவர் என்று அறிவிக்கக் கோருகிறது.
அறிந்தே பணத்தைப் பெற்றது, நேர்மையற்ற முறையில் உதவியது, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இழப்பீடு கோருகிறது.








