சுங்கை பட்டாணி, ஆகஸ்ட்.21-
நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஓர் அனைத்துலகப் பள்ளியின் முன்னாள் மேலாளரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த சுங்கை பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மாஜிஸ்திரேட் அஸ்லான் பஸ்ரி முன்னிலையில் குற்றம் சுமத்தப்பட்ட 56 வயது வி. இளங்கோ, மனநல சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, மருத்துவமனையின் அறிக்கையை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு பிராசியூஷன் தரப்புக்கு உத்தரவிடப்பட்டது.
தாம் மன நல காப்பகம் ஒன்றில் இருந்து வருவதாக இளங்கோ ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் அஸ்லான் பஸ்ரி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
கெடா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகரான டி. சந்திரராஜன் என்பவர் கட்டம் கட்டமாக வழங்கிய 1.3 மில்லியன் ரிங்கிட் பணத்தை நம்பிக்கை மோசடி செய்ததாகச் சிரம்பானைச் சேர்ந்த இளங்கோ குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஜுலை மாதம் வரை பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலமாக ஆன்லைன் வழி 56 வயது சந்திரராஜனிடமிருந்து இளங்கே 1.3 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாக இளங்கோ குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கோலாலம்பூரில் தாம் பணியாற்றிய அனைத்துலகப் பள்ளியில் பல்வேறு குத்தகை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சந்திரராஜனை நம்ப வைத்து பணத்தைக் கட்டம் கட்டமாக பெற்றதாக இளங்கோவிற்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
பள்ளியின் பழைய நண்பர்களை ஒன்று திரட்டி நடைபெற்ற ஒன்றுகூடும் நிகழ்ச்சியில் இளங்கோவை மீண்டும் சந்தித்த தாம், அவரின் ஆசை வார்த்தைகளை நம்பி, பெரியளவில் பணத்தை வழங்கியதாகவும், அவர் வாக்குறுதி வழங்கியதைப் போல் அந்த அனைத்துலகப் பள்ளியிலிருந்து எந்தவொரு குத்தகை வாய்ப்பையும் பெற்றுத் தரவில்லை எனவும் சந்திர ராஜன் போலீசில் புகார் செய்துள்ளார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் இளங்கோ குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








