துன் மகாதீர் சவால்
நாட்டின் பிரதமராக தாம் பதவி வகித்த காலத்தில் கோடிக் கணக்கான வெள்ளி சொத்துக்களைக் குவித்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தம்முடைய சொத்து விவரங்களைப் பகிரங்கப்படுத்த தயாரா? என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இன்று சவால் விடுத்துள்ளார்.
அன்வார் நேர்மையானவர், அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தாதவர், திருவாளர் கை சுத்தம் என்பது உண்மையாக இருக்குமானால் தாம் விடுத்துள்ள இந்தச் சவாலை ஏற்று அவருடைய சொத்து விவரங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று துன் மகாதீர் சூளுரைத்தார்.
முன்பு பதவியில் இருந்த நாட்டின் முன்னாள் தலைவர்கள் கோடிக்காணக்கான வெள்ளி சொத்துக்களைச் சுருட்டிக்கொண்டதாக தமது உரையில் அடிக்கடி குறிப்பிடும் அன்வாரின் அண்மையக்கால பேச்சுக்கள், தம்மை வியப்பில் ஆழ்த்துவதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
ஏழை மலாய்க்காரர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் முன்னாள் தலைவர்கள் தங்களின் பதவிக்காலத்தில், அவர்களுக்கு உதவியிருக்க வேண்டுமே தவிர, பதவி இழந்த காலத்தில் அவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கக்கூடாது என்று அண்மையில் அன்வார் வெளியிட்ட ஓர் அறிக்கை தம்மை குறி வைப்பது போல் உள்ளது என்று துன் மகாதீர் தெரிவித்தார்.








