பெரிக்காத்தான் நேஷனலின் புத்ராஜெயா எம்.பி. டாக்டர் ராட்ஸி ஜிடின் கடந்த இரண்டு நாட்களாக டிக் டோக் சமூக வலைத்தளங்களில் பெரும் கவன ஈர்ப்புக்குரிய நபராக விளங்கி வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தன்னிலை மறந்தவரைப் போல அந்த முன்னாள் கல்வி அமைச்சர், உரக்க கத்திய தாரிக் பலிக்... தாரிக் பலிக் என்ற வார்த்தை, தற்போது டிக் டோக் கில் நகைப்புக்குரிய சொல்லாக பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
அவரவர் வெவ்வேறு பாணியில் டாக்டர் ராட்ஸி ஜிடின் னைப் போல் நடித்துக் காட்டி, கிண்டல் செய்து வருகின்றனர். சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை செய்து வருகின்ற பணியாளர் ஒருவர் கப்பல் அணைவதற்கு வழிகாட்டுவதைப் போல தாரிக் பலிக் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருப்பது பலரது கவன ஈர்ப்பாக உள்ளது.
கயிறு இழுக்கும் போட்டியிலும் அந்த சொல்லைப் பயன்படுத்துவதைப் போல சிலர் தங்கள் கற்பனைக் குதிரையை ஓடவிட்டுள்ளனர். ராட்ஷி ஜீடினின் அந்த தாரிக் பலிக் வார்த்தையை சிலர் தங்கள் கைப்பேசியின் ரிங்தோன் னாகவும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.








