குவாந்தான், ஜனவரி.09-
மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை முழுமையாக இழந்த மக்களுக்கு, அரசாங்கம் சார்பில் இலவசமாக வீடுகள் கட்டி வழங்கப்படுவதை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிச் செய்ய, கூட்டரசு அரசாங்கமும் பகாங் மாநில அரசாங்கமும் இணைந்து மேற்கொண்டு வரும் இந்தத் திட்டம் மிகவும் போற்றுதலுக்குரியது என்று சுல்தான் அப்துல்லா வர்ணித்தார்.
தங்களின் வாழ்நாள் சேமிப்பில் கட்டிய வீடுகளை வெள்ளத்தில் இழந்த மக்களுக்கு, மீண்டும் ஒரு புதிய வீட்டை இலவசமாகக் கட்டித் தருவது மிகப் பெரிய நிவாரணமாகும். இது மக்களின் துயரைத் துடைப்பதில் அரசாங்கத்திற்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறது.
பகாங், பெந்தோங், கம்போங் சுங்கை பெர்டாக்கில் இன்று, ERC மற்றும் Ru”RASA வீடுகளுக்கான சாவிகளை மக்களிடையே ஒப்படைக்கும் நிகழ்வில் சுல்தான் இதனைத் தெரிவித்தார்.








