Aug 13, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெக தொடர்ந்து நீடிக்கும்: சைபுடின் நம்பிக்கை
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெக தொடர்ந்து நீடிக்கும்: சைபுடின் நம்பிக்கை

Share:

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜசெக சிறப்பு மாநாட்டில், அக்கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க முடிவு செய்யும் என பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் சைபுடின் நசுஷன் இஸ்மாயில், நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாட்டின் நலனுக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் ஜசெக முன்னுரிமை அளிக்கும் என்றும், அரசாங்கத்தின் தொடர்ச்சியை உறுதி செய்யும் என்றும் அவர் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

நாட்டின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றான ஜசெக தலைமையிடம் அரசியல் விவேகம் இருப்பதாகவும் சைபுடின் கூறினார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு மாநாட்டில், நாடாளுமன்றத்தின் எஞ்சிய காலத்திற்கு அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதா அல்லது அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகுவதா என்பதை 4,264 ஜசெக பேராளர்கள் வாக்களித்து முடிவு செய்யவுள்ளனர்.

சபா தேர்தலில் ஜசெக படுதோல்வியடைந்ததுடன், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் தேர்தல்களிலும் பக்காத்தான் ஹராப்பான் கடும் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த சிறப்பு மாநாடு நடைபெறுகிறது.

இதனிடையே, தீவிரவாத சக்திகள் வலுப்பெறுவதைத் தடுக்க ஜசெக அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும் என பேராக் ஜசெக ஆதரவு தெரிவித்துள்ளது.

Related News