
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜசெக.வின் தேசிய பேராளர் மாநாட்டை முன்னிட்டு, தாம் பதற்றமாக இருப்பதாக வெளியான கருத்துகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மறுத்துள்ளார்.
புத்ராஜெயாவில் இன்று போக்குவரத்து அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக், தாம் மிகவும் நிதானமாக இருப்பதாகக் கூறினார்.
இன்றைய செய்தியாளர் சந்திப்பு தமது கடைசி சந்திப்பாக இருக்குமா என்ற கேள்விக்கு, “நான் அப்படிச் சொல்லவே இல்லை. தேசிய பேராளர் மாநாடு முடிந்த பிறகு பேசலாம்,” என்றார்.
தேசிய மாநாட்டில், கூட்டரசு அரசாங்கத்தில் ஜசெக தொடர்ந்து இடம்பெறுவதா அல்லது விலகுவதா என்பது உள்ளிட்ட கட்சியின் எதிர்கால திசை குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
இதுதொடர்பான தீர்மானத்தை அந்தோணி லோக் முன்வைக்கவுள்ள நிலையில், 1,704 கிளைகளைச் சேர்ந்த 4,264 பேராளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.







