Aug 13, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாப்புக்கான சிசிடிவி  செயலிழப்பு — நகராண்மைக் கழகத்தின் மீது பொதுமக்கள் கேள்வி
தற்போதைய செய்திகள்

பாதுகாப்புக்கான சிசிடிவி செயலிழப்பு — நகராண்மைக் கழகத்தின் மீது பொதுமக்கள் கேள்வி

Share:

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 9.00 மணி அளவில் சிரம்பானிலிருந்து கூலிம் பேருந்து நிலையத்திற்கு வந்த பெண்ணிடம் கழிப்பறை அருகே ஒரு மோட்டார் சைக்கிளில் முகவரி கேட்பது போல் நடித்து கணவன்–மனைவி எனக் கூறப்படும் இருவர் 6 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் நாராயணன் சுப்பிரமணியம் புகார் அளித்துள்ளார்.

சம்பவத்தின்போது தனது துணைவியார் கீழே தள்ளப்பட்டதில் இடுப்பில் காயமும், கண்ணில் லேசான வீக்கமும் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளைப் பெற முயன்றபோது, கூலிம் மாவட்ட பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நீண்டகாலமாக செயல்படவில்லை என்று தங்களுக்கு தெரிவிக்கப்பட்டது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது என்று நாராயணன் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் தனது மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமானால் அதற்கு இவர்கள் பொறுப்பேற்பார்களா? என்று அதிர்ச்சி கலந்த தொனியில் நாராயணன் கேள்வி எழுப்பினார்.

கூலிம் நகராண்மைக் கழகத்தின் கண்காணிப்பில் உள்ள சிசிடிவி-களுக்கான பராமரிப்பு நிறுவன ஒப்பந்தம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்ததாகவும், புதிய ஒப்பந்ததாரரைத் தேர்வு செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் நகராண்மைக் கழகம் தெரிவித்ததாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் இராஜ்குமார் இராமநாதன் திசைகளிடம் கூறினார். எனினும் நகராண்மைக்கழக அதிகாரிகள் வழங்கிய பதில் மிகவும் அலட்சியமாக இருந்ததை அவர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையத்தில் சிசிடிவி செயலிழந்திருப்பதும், சில பகுதிகளில் சிசிடிவி வசதி இல்லாததும் பொதுமக்கள் மற்றும் அவ்விடத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“நாளை ஏதேனும் பெரிய சம்பவம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு?”கூலிம் நகராண்மை பதிலளிக்குமா? என பாதிக்கப்பட்ட தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சிசிடிவி கண்காணிப்பு அமைப்பை உடனடியாக மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related News