கோலாலம்பூர், ஜனவரி.22-
மலேசிய இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கி வரும், மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகமான MDEC ஏற்பாட்டில், 2026-ஆம் ஆண்டிற்கான MDX SLS எனப்படும் மலேசிய இலக்கவியல் முடுக்க மாநில தலைமைத்துவ மாநாட்டின் மூன்றாம் பதிப்பு நேற்று நடைபெற்றது.

இம்மாநாடானது, தேசிய இலக்கவியல் செயல்திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்தவும், மடானி அரசாங்கத்தின் இலக்குகளுக்கு ஏற்ப, 2030-ஆம் ஆண்டிற்குள் மலேசியாவை ஒரு செயற்கை நுண்ணறிவு நாடாக மாற்றவும் வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய முன்முயற்சியாகும்.
MDEC-ன் மாநில இலக்கவியல் பொருளாதார அலுவலகமான SDEO தலைமையில் நடைபெற்ற MDX SLS 2026 மாநாடானது, தேசிய இலக்கவியல் முன்னுரிமைகளை, மாநில அளவில் பயனுள்ள செயல்பாடுகளாக மாற்றும் நோக்கம் கொண்டது.

பினாங்கு, ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள MDEC-ன் வட்டார அலுவலகங்கள் மூலம், அரசு மற்றும் தனியார் கூட்டமைப்புடன் இலக்கவியல் சுற்றுச்சூழல் அமைப்பு வலுப்படுத்தப்பட்டு, வட்டார அளவில் மலேசியாவின் இலக்கவியல் போட்டித்திறனை மேம்படுத்தப்படுகிறது.
MDEC தனது 30ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில், இவ்வாண்டு மாநாட்டில், நாடு தழுவிய நிலையில் 120 மாநிலத் தலைவர்கள் பங்கேற்றனர்.

அவர்களில் மாநில முகவர்கள், பாலிசி வடிவமைப்பாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் இலக்கவியல் சுற்றுச்சூழல் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட இலக்கவியல் துணையமைச்சர் Datuk Wilson Ugak Anak Kumbong உரையாற்றுகையில், AI தொழில்நுட்பங்களின் பயன்கள் நாடு முழுவதும் உள்ள தொழில்துறைகள் மற்றும் சமூகங்களுக்கு சென்றடைவதை இம்மாநாடு உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், தொழில் துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகத்துடன் இணைந்து உருவாக்கப்படும், செயற்கை நுண்ணறிவு சூழலமைப்பை இம்மாநாடு மேம்படுத்துவதாக MDEC தலைமைச் செயலதிகாரி அனுவார் ஃபாரிஸ் ஃபாட்சீல் குறிப்பிட்டுள்ளார்.








