Apr 18, 2026
Thisaigal NewsYouTube
தர்மம் வென்றது: அண்ணன்மார்களின் 'கடன்' வாதத்தை முறியடித்து வழக்கறிஞர் வேல் மனோகரன் நீதிமன்றத்தில் அதிரடி வெற்றி
தற்போதைய செய்திகள்

தர்மம் வென்றது: அண்ணன்மார்களின் 'கடன்' வாதத்தை முறியடித்து வழக்கறிஞர் வேல் மனோகரன் நீதிமன்றத்தில் அதிரடி வெற்றி

Share:

தம்பியின் கல்விக்காகச் செலவு செய்த பணத்தைக் 'கடன்' என்று கூறி வசூலிக்க முயன்ற அண்ணன்மார்களின் களின் சட்டப் போராட்டத்தை முறியடித்து, வழக்கறிஞர் வேல் மனோகரன் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். "இது நியாயத்திற்கும் தர்மத்திற்கும் கிடைத்த வெற்றி" என சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1987-இல் அமரர் மனோகரன் அவர்களால் தொடங்கப்பட்ட 'லின்சூன்' குழுமம், அவரது மறைவுக்குப் பிறகு 2005 முதல் அவரது மனைவி மேனகா மற்றும் மகன்கள் டத்தோ நடராஜா, டத்தோ சதீஷ்குமார் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

2010 முதல் தம்பி வேல் மனோகரனின் கல்விக்காக நிறுவனத்திலிருந்து பணம் வழங்கப்பட்டது. ஆனால், 2020-இல் ஏற்பட்ட குடும்பப் பிரிவினையைத் தொடர்ந்து, தம்பிக்குக் கொடுத்த கல்விச் செலவுத் தொகை 'அன்பளிப்பு' அல்ல, அது திரும்பப் பெறப்பட வேண்டிய 'கடன்' என்று கூறி லின்சூன் குழுமம் வழக்குத் தொடர்ந்தது.

ஐந்து ஆண்டுகள் நீண்ட இந்த விசாரணையில், சொந்தத் தம்பிக்கு எதிராக அண்ணன்கள் இருவரும் சாட்சியம் அளித்தனர். ஆனால், ஆதாரங்களை ஆய்வு செய்த சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி துவான் அபு பக்கர், அந்தத் தொகை கடன் அல்ல என்று திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தார்.

வாதிக்கும் வேல் மனோகரனுக்கும் இடையே எழுத்துப்பூர்வ ஒப்பந்தமோ, வாய்மொழி ஒப்பந்தத்திற்கான ஆதாரங்களோ இல்லை என்பதால், குடும்ப இணக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிதியுதவி கடனாகக் கருதப்படாது. மேலும் குடும்ப உறவு முறிவிற்குப் பின் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, 'எஸ்டோப்பல்' கொள்கையின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்டு, அது கடனல்ல என்பது உறுதி செய்யப்படுகிறது என்று நீதிபதி துவான் அபு பக்கர் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

லின்சூன் நிறுவனத்திற்காக வழக்கறிஞர்கள் கார்த்திகேசன் மற்றும் ஏ.ஆர். தமயந்தி வாதாடினர். வேல் மனோகரன் தரப்பில் டீட்ரா ஷாரினா & கோ நிறுவனத்தின் வழக்கறிஞர் அஸ்மாவி வாதாடி வெற்றியை உறுதி செய்தார்.

வெற்றிக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்ட வேல் மனோகரன் கூறுகையில், "எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனுக்கு நன்றி. நான் 10 வயதாக இருந்தபோதே 'நீ ஒரு பெரிய வழக்கறிஞராக வேண்டும்' என்று கனவு கண்ட எனது தந்தை அமரர் மனோகரன் அவர்களுக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன். இன்று அவர் என்னுடன் இல்லாதது வேதனை அளிக்கிறது," என கண்கலங்கினார்.

மேலும், கடினமான சூழலிலும் தனது EPF பணத்தைச் செலவிட்டுப் படிக்க வைத்த தாய் மேனகா, தோளோடு தோள் நின்ற அக்கா பரமேஸ்வரி மற்றும் உறுதுணையாக இருந்த மாமா டாக்டர் ஆர்.வி. ஷ்யாம் பிரசாத் ஆகியோருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பலரது கவனத்தை ஈர்த்த இந்தத் தீர்ப்பு, கல்விக்காகச் செய்யப்படும் செலவுகள் ஒருபோதும் கடனாகாது என்பதைச் சட்டப்பூர்வமாக நிலைநாட்டியுள்ளது.

Related News