கோலாலம்பூர், நவம்பர்.19-
கடந்த 7 மாதங்களில் 97,000-த்திற்கும் அதிகமானோர் செயற்கை போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே காலக் கட்டத்தில் பதிவாகியுள்ள போதைப் பித்தர்களின் மொத்த எண்ணிக்கையான 134,916 பேரில், 72 விழுக்காட்டினர், செயற்கை போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குடும்பங்கள், பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் போன்றவற்றில் போதைப் பொருள் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டார்.








