பாலஸ்தீனுக்கு ஆதரவாக Himpunan 10,000 Solidariti Palestin எனும் பேரணி இன்று தலைநகரில் நடந்தது. கேஎல்சிசி மசூதியில் இருந்து ஜாலான் துன் ரசாக் நோக்கிய பாதையில் மலேசியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் அருகில் பிற்பகல் 2 மணி அளவில் இந்தப் பேரணி நடந்தது.
இஸ்ரேலை அழித்துவிடுங்கள் போன்ற முழக்கங்கள் அங்கு எதிரொலித்தன.
மேகமூட்டமான வானிலையைத் தொடர்ந்து லேசான மழை தூறினாலும். ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் இந்தப் பேரணியில் திரண்டனர்.
பாலஸ்தீன மக்கள் மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறையை க் கண்டித்து இந்தப் பேரணி நடத்தப்பட்டதாக அலோர் ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினரும் பாஸ் கட்சியின் தேசிய இளைஞர் பேரவையின் தலைவருமான அஃப்னான் ஹமிமி தைப் அஜாமுதீன் தெரிவித்தார்.
பேரணியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் பாலஸ்தீனியக் கொடிகளையும் இஸ்ரேலிய சியோனிஸ் ஆட்சியின் நடவடிக்கைகளை கடுமையாகக் கண்டிக்கும் பதாகைகளையும் வைத்திருந்தனர்.
பாஸ் கட்சியின் தலைவர், டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான், பெர்சாத்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின், தலைவர் சையத் ஹசன் சையத் அலி ஆகிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பேரணியில் பங்கேற்றவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 40க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.








