ஈப்போ, செப்டம்பர்.07-
ஈப்போ நகரில் இன்று அதிகாலை 1.15 மணி அளவில் நடந்த பரபரப்பான சம்பவத்தில், காவற்படை அதிகாரி சந்தேகத்திற்குரிய மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டதுடன் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான அந்த மர்ம நபர் ஓட்டி வந்த கார் காவற்படையினரால் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தக் கார் திடீரென ஒரு தோட்டத்தில் சென்று நின்றது. காரில் இருந்த அந்த மர்ம நபர் ஒருவரைக் கைது செய்ய முயன்ற போது, அவர் காவற்படையினரின் துப்பாக்கியைப் பறித்து சுட்டதுடன், கத்தியால் குத்தியும் காயப்படுத்தியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, காயமடைந்த காவல் படை அதிகாரியின் உடல்நிலை சீராக உள்ளது என பேராக் மாநிலக் காவற்படையின் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டி தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவம் நடந்த வாகனத்தின் பின்புற இருக்கையில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவற்படையினர் தப்பியோடிய மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.








