சுங்கை பட்டாணி, நவம்பர்.17-
சுமார் 60 கிலோ எடை கொண்ட மலைப்பாம்பு ஒன்று, தங்கள் வீட்டுக் கழிவறையின் கூரையின் மேல் இருந்ததைக் கண்ட சுங்கை பட்டாணியைச் சேர்ந்த ஆசிரியரும், அவரது மகளும் பேரதிர்ச்சிக் குள்ளாயினர்.
தாமான் பண்டார் பாரு PKNK-இல் உள்ள அவர்களது வீட்டில், கடந்த வாரம் புதன்கிழமை கழிவறையின் மேற்கூரையின் ஒரு பகுதி, திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது.
அப்போது வீட்டிலிருந்த அந்த ஆசிரியையின் 15 வயது மகள், கூரையின் மேல் பாத்தேக் போன்ற ஒரு துணி இருப்பதாக புகைப்படம் எடுத்து தனது தாயாருக்கு அனுப்பியுள்ளார்.
முதலில் பாத்தேக் வகை துணி என்று நினைத்த அவர்கள், பின்னர் தான் அது ஒரு மலைப்பாம்பு என்பதை உணர்ந்து, பொது தற்காப்புப் படையான ஏபிஎம்முக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், சுமார் 60 கிலோ எடை கொண்ட ராட்சஷ மலைப்பாம்பு ஒன்றைப் பிடித்துள்ளனர்.
இத்தனைப் பெரிய மலைப்பாம்பை இதுவரை கண்டிராத ஆசிரியரும், அவரது மகளும் பீதியடைந்துள்ளனர்.








