அனைத்துலக இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் கோலாலம்பூர், சிங்கப்பூருடன் போட்டியிட வேண்டும் என்றும், தங்களுக்கு பிடித்த கலைஞர்களின் நிகழ்ச்சிகளைக் காண மலேசியர்கள், சிங்கப்பூர் செல்ல வேண்டிய நிலை இருக்கக்கூடாது என்றும் பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
மேலும், கோலாலம்பூரில் அனைத்துலக இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அனைத்துலகக் கலைஞர்களை மலேசியாவிற்கு ஈர்க்கும் வகையில் கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் வெளிநாட்டு கலைஞர்களுக்கான பாதுகாப்பு வைப்புத் தொகையை 30 ஆயிரம் ரிங்கிட்டிலிருந்து, 15 ஆயிரமாகக் குறைத்துள்ளது.
மேலும், 2025-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செமி (CEMI) திட்டத்தின் கீழ், தகுதி பெறும் அனைத்துலக நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் செலவினங்களில் 30 விழுக்காடு வரை, அதிகபட்சம் 1.5 மில்லியன் ரிங்கிட் வரை சலுகை வழங்கப்படுகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டு நாடு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சுமார் 1.72 பில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
தெ வீக்கென் (The Weeknd), பிடிஎஸ் (BTS) உள்ளிட்ட சர்வதேச கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ள நிலையில், இசை நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க மலேசியா முயற்சித்து வருகிறது.








