பினாங்கு புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் உணவு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில், அது குறித்து பினாங்கு மாநில சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
அந்த உணவானது முழுமையான மதிய உணவு அல்ல என்றும், மாலை நேர சிற்றுண்டி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவ அதிகாரிகளுக்கு தினமும் காலை உணவு, மதிய உணவு, மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவு என நான்கு வேளை உணவு வழங்கப்படுவதாகவும், மொத்தமாக தினசரி 1,500 முதல் 1,800 கிலோ கலோரிகள் வரை உணவு வழங்க வழிகாட்டுதல்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரலான அந்த புகைப்படம் முழு உணவு வழங்கும் நடைமுறையின் பின்னணி தெரியாமல் பரப்பப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஸுல்ஹிஸ்ஸாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பணியில் இருக்கும் மருத்துவ அதிகாரிகளின் நலனை உறுதி செய்ய உணவு வழங்கும் முறையில் தேவையான மேம்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








