முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதின் யாசினுக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதற்கான காரணத்தை அட்டர்னி ஜெனரல் டுசுகி மொக்தார் வெளிப்படையாக விளக்கமளிக்க வேண்டும் என்று ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
புகாரி இகுய்டி செண்டிரியான் பெர்ஹாட் தொடர்பான இந்த நான்கு குற்றச்சாட்டுகளில், வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், DNAA எனப்படும் 'விடுதலை செய்யப்படாமல் விடுவிக்கப்படும்' கோரிக்கையின் அடிப்படையில், முகைதீன் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வழக்கறிஞருமான கோபிந்த் சிங், முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு பாதியிலேயே கைவிடப்பட்டதற்கான சட்ட மற்றும் ஆதார அடிப்படையிலான காரணங்களை பொதுமக்களுக்கு அட்டர்னி ஜெனரல் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உயர்மட்ட குற்றவியல் வழக்குகள் தெளிவான காரணமின்றி பாதியிலேயே கைவிடப்பட்டால், அட்டர்னி ஜெனரல் மீதான நம்பிக்கையும், ஒட்டுமொத்த குற்றவியல் நீதித்துறை மீதான நம்பிக்கையும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கோபிந்த் சிங் எச்சரித்துள்ளார்.








