கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரிலுள்ள சுமார் 700 கேகே மார்ட் கிளைகளை பொதுமக்களுக்கான ஜிஎஸ்டிபி எனப்படும் பாதுகாப்பு மையங்களாக மாற்ற கோலாலம்பூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
24 மணி நேரமும் செயல்படுவது, போதிய வெளிச்சம் மற்றும் சிசிடிவி வசதி இருப்பது போன்ற காரணங்களால் இந்தக் கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கோலாலம்பூர் மாநகர போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் கூறுகையில், அவசரநிலை, குற்றச்செயல் அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக உதவி பெறும் இடங்களாக கேகே மார்ட் செயல்பட முடியும் என்றார்.
மேலும், கடைகளின் மையப்படுத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் அணுகுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைமையக வளாகத்தில் இன்று கேகே மார்ட் கிளை திறப்பு விழாவின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கேகே சூப்பர்மார்ட் & சூப்பர்ஸ்டோர் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சாய் கீ கானும் கலந்து கொண்டார்.

போலீசாரின் இந்த புதிய முயற்சி குறித்து சாய் கீ கான் கூறுகையில், போலீஸ் விசாரணைகளுக்கு உதவும் வகையில் சிசிடிவி காட்சிகளைப் பகிர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் சுமார் 1,100 கேகே மார்ட் கிளைகள் உள்ளதாகவும், எதிர்காலத்தில் அரசு கட்டடங்களிலும் கிளைகளை அமைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே கோலாலம்பூர் போலீஸ் தலைமையக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள கேகே மார்ட் கிளையானது, பிடிஆர்எம் கட்டடத்திற்குள் செயல்படும் முதல் கேகே மார்ட் கிளை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் இதுபோன்று மேலும் சில போலீஸ் கட்டடங்களிலும் கேகே மார்ட் கிளைகள் திறக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.








