ஜோகூர் பாரு, ஜூலை.29-
12 வயதுச் சிறுமியைச் சுத்தியால் தாக்கி, காயம் விளைவித்ததாக நம்பப்படும் 39 வயது ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜோகூர் பாரு, தாமான் உங்கு துன் அமினாவில் உள்ள அடுக்குமாடி வீடொன்றில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பிடிபட்ட நபரைத் தடுத்து வைப்பதற்கு போலீசார் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீதிமன்றத் தடுப்புக் காவல் அனுமதியைப் பெற்றுள்ளனர்.
கடந்த ஜுலை 26 ஆம் தேதி இரவு 7.25 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் அன்றைய இரவே சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்து இருப்பதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
பிடிபட்ட நபரின் பின்னணியை ஆராய்ந்து பார்த்ததில், அவர் போதைப்பொருள் கடத்தல் உட்பட பல்வேறு குற்றப் பின்னணிப் பதிவுகள் கொண்டு இருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று பல்வீர் சிங் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டச் சிறுமியின் உச்சந்தலையில் ஏற்பட்ட கடும் காயம், வலது கையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர், ஜோகூர் பாரு, சுல்தானா அமீனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அவரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர் என்று பல்வீர் சிங் தெரிவித்தார்.








