கோலாலம்பூர், ஜனவரி.22-
கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்படும் நிர்வாகச் சீர்கேடு மற்றும் இழப்புகளிலிருந்து உறுப்பினர்களின் நலனைப் பாதுகாக்க, கூட்டுறவுச் சங்கச் சட்டம் 1993 மற்றும் மலேசிய கூட்டுறவுச் சங்க ஆணைய SKM சட்டம் 2007 ஆகியவற்றின் கீழ் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடு அமைச்சு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் மக்களவையில் தெரிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கமும் தங்களது ஆண்டு நிகர லாபத்தில் குறைந்தது 15 விழுக்காட்டை 'சட்டப்பூர்வ சேமிப்பு நிதியான KWRS- சுக்கு மாற்ற வேண்டும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
2025-ஆம் ஆண்டில், 5,518 கூட்டுறவுச் சங்கங்கள் இத்திட்டத்தின் கீழ் 12.2 பில்லியன் ரிங்கிட் தொகையைச் சேமித்துள்ளன. மேலும், இந்த நிதியை SKM நிர்வகிக்கும் 'கூட்டுறவு வைப்புக் கணக்கில் முதலீடு செய்வதன் மூலம், உறுப்பினர்களின் பங்கு மூலதனத்தைப் பாதுகாப்பதற்கான பணப் புழக்கம் உறுதிச் செய்யப்படுகிறது என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில், 2025-ஆம் ஆண்டில் 11,984 கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் மேலாளர்களுக்கு முறையான நிதி மற்றும் நிர்வாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. SKM-இன் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளால், கூட்டுறவுச் சங்கங்கள் மீதான புகார்கள் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாகக் குறைந்து வருகின்றன என்று மக்களவையில் ஜெர்லூன் எம்.பி. டாக்டர் ஹாஜி அப்துல் கானி அஹ்மாட் கேள்விக்கு பதில் அளிக்கையில் ஸ்டீவன் சிம் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2023-இல் 823-ஆக இருந்த புகார்களின் எண்ணிக்கை, 2025-இல் 291-ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் கூட்டுறவுத் துறையில் சிறந்த நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை உறுதிச் செய்யப்படுவதாக ஸ்டீவன் சிம் தெளிவுபடுத்தினார்.








