கோலாலம்பூர், ஆகஸ்ட்.27-
முந்தைய அரசாங்கம் செயல்படுத்தத் துணிச்சலோ அல்லது விருப்பமோ கொண்டிருக்காத மற்றொரு மிகப் பெரிய சீர்திருத்தத்தை மடானி அரசாங்கம் அமல்படுத்தவிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு பொது நிதி மற்றும் பொறுப்புக்கூறல் சட்டம் இயற்றப்பட்டதைப் போன்று கொள்முதல் சட்டத்தின் வாயிலாக மற்றொரு மிகப் பெரிய சீர்திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வரவிருப்பதாக நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இது நாட்டின் நிர்வாகத் திறனை வலுப்படுத்துவதுடன் அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதாக இருக்கும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தச் சட்ட மசோதாவின் மூலம் நிதி அமைச்சரின் முடிவுகள் உட்பட கொள்முதல் தொடர்பான அனைத்து முடிவுகளும் சரி பார்க்கவும், அவற்றின் சமநிலையை உறுதிச் செய்யவும் முடியும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
குறிப்பாக நிதி அமைச்சர் எடுக்கக்கூடிய முடிவுகளை நடுவர் மன்றம் மூலமாக சவால் விடவும், சிறப்புப் பணிக்குழு மூலம் மறுமதிப்பீடு செய்யவும் இது வழிவகுக்கும்.
அதே வேளையில் இந்த முடிவுகளில் நிகழக்கூடிய தவறுகளுக்குச் சம்பந்தப்பட்டவரைத் தண்டிக்கவும் இந்தச் சட்டம் வகை செய்கிறது. இதில் நிதி அமைச்சரும் விதி விலக்கல்ல என்று டத்தோ ஶ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.
இவ்விவகாரங்களில் நாட்டின் கண்ணியமும், சுயமரியாதையும் சார்ந்து இருப்பதால் இது போன்ற கடும் விதிகளை உட்படுத்திய சட்டத்தை அறிமுகப்படுத்த முந்தைய அரசாங்கம் துணியவில்லை என்று பிரதமர் விளக்கினார்.








