கேஎல்ஐஏவில் தமக்கும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி வெளியான விவகாரத்தில் எந்த முடிவாக இருந்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாக மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ்ஸின் தலைமை இயக்குநர் முஹமட் ஷுஹைலி ஸையின் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கேஎல்ஐஏவில் வெளிநாட்டு இடைத்தரகர் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புகார்களைத் தொடர்ந்து தமது குழுவுடன் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.
அப்போது விசாரணை அறைக்குள் இருவர் அனுமதியின்றி காணொளி பதிவு செய்ததாகவும், அதனை அழிக்குமாறு தமது அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும் முஹமட் ஷுஹைலி தெரிவித்தார்.
காணொளி தமது நற்பெயரையும் ஏகேபிஎஸ்ஸின் நற்பெயரையும் களங்கப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் எனக் கூறிய அவர், போலீசில் புகார் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பவத்தின்போது உடல் ரீதியான மோதல் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு, அதனை விசாரணை அதிகாரிகளே தீர்மானிக்க வேண்டும் என்றும் முஹமட் ஷுஹைலி கூறினார்.








