கோலாலம்பூர், நவம்பர்.20-
அரச மலேசியப் போலீஸ் படையில் மனுதாரர்கள் சேர்க்கப்படுவதற்கும், பதவி உயர்வுக்கும் இன ரீதியான கோட்டா முறை இல்லை என்று உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.
போலீஸ் துறையில் ஆள் சேர்ப்புக்கு பூமிபுத்ராக்கள் அல்லது பூமிபுத்ரா அல்லாதவர்கள் என்று இன ரீதியான கோட்டா ஒதுக்கீட்டு முறை விதிக்கப்படுவதில்லை. மனுதாரர்கள் சேர்க்கப்படுவதற்கு நடைபெறும் அனைத்து தேர்வுகளும் கண்டிப்பாக தகுதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன என்று டாக்டர் ஷாம்சுல் அனுவார் இன்று மக்களவையில் விளக்கினார்.
கல்வித் தகுதி, உடல் தகுதி மற்றும் உடல் ரீதியான ஆரோக்கியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே போலீஸ் துறைக்கு மனுதாரர்கள் சேர்க்கப்படுகிறார்களே தவிர இன ரீதியான கோட்டா முறையைக் கொண்டு அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அரச மலேசியப் போலீஸ் படையில் பணிக்கு அமர்த்தப்பட்டவர்களில் பூமிபுத்ரா அல்லது பூமிபுத்ரா அல்லாத மனுதாரர்களின் விழுக்காடு மற்றும் அத்துறையில் இன ரீதியான கோட்டா முறை கடைப்பிடிக்கப்படுகின்றதா? என்று கிள்ளான் எம்.பி. வீ. கணபதிராவ் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் டாக்டர் ஷாம்சுல் அனுவார் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.
போலீஸ் படையில் பூமிபுத்ரா அல்லாதவர்களின் பங்கேற்பை அதிகளவில் ஊக்குவிப்பதற்கு பல்வேறு அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. அதில் நடப்பு விதிமுறைகளில் சில தளர்வுகள் வழங்கப்படுவதும் அடங்கும் என்று டாக்டர் ஷாம்சுல் அனுவார் தெளிவுப்படுத்தினார்.








