கோலாலம்பூர், ஜனவரி.19-
சமூக ஊடகப் பிரபலங்கள் அல்லது டிஜிட்டல் செல்வாக்கு செலுத்துபவர்கள், தாங்கள் பெறும் பணம் மட்டுமல்லாது, விளம்பரங்களுக்காகப் பெறும் இலவசப் பொருட்கள் மற்றும் பரிசுகளையும் வருமானமாக அறிவிக்க வேண்டும் என்று உள்நாட்டு வருமான வாரியமான LHDN புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
1967-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ், இன்ஃப்ளூயன்சர்கள் பெறும் அனைத்து வகையான வருமானங்களும் வரிக்கு உட்பட்டவை. இதில் ரொக்கப் பணம், பொருட்கள், தள்ளுபடி வவுச்சர்கள், இலவசச் சேவைகள் மற்றும் பண மதிப்புள்ள சமூக ஊடகப் பரிசுகளும் அடங்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் என தனிநபர்களாகச் செயல்படுபவர்கள் ஒரு வகையாகும். அனிமேஷன் கதாபாத்திரங்கள் அல்லது உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றொரு வகையாகும். இவர்கள் அனைவரும் இந்த விதிமுறைக்குள் வருவார்கள் என்று வருமான வரி வாரியம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகத் தளங்களிலிருந்து நேரடியாகப் பெறும் பணம், பிராண்ட் தூதராகச் செயல்படுவதற்கான கட்டணம், பொருட்களை விற்பனை செய்தல், தங்களின் சமூக ஊடகக் கணக்குகளை விற்பனை செய்தல் மற்றும் ராயல்டி போன்ற அனைத்தும் வருமானமாகக் கருதப்படும் என்று வருமான வரி வாரியம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








