கோலாலம்பூர், டிசம்பர்.24-
மலேசியப் பல்கலைக்கழகங்கள், உலகளாவிய தரவரிசைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாகக் கூறப்படும் விமர்சனங்களை மலேசிய வட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அஹ்மாட் மார்தாடா முகமட் மறுத்துள்ளார்.
பல்கலைக்கழகத் தரவரிசைகள் உயர்க்கல்வி சூழலின் ஓர் அங்கமாக இருந்தாலும், அதுவே 'இறுதி இலக்கு' கிடையாது என்பதுதான் மலேசிய அரசாங்கத்தின் தெளிவான கொள்கை என்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
பல்கலைக்கழகத் தரவரிசை அமைப்புகளின் வணிகப் போக்கு, கற்பித்தல் முறைகள் மற்றும் கல்விச் சுதந்திரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்த கவலைகளை அவர் ஒப்புக் கொண்டார். இருப்பினும், மலேசியப் பல்கலைக்கழகங்கள் அறிவுப் பகிர்வு மற்றும் தரமான நிர்வாகத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றன என்பதை அவர் வலியுறுத்தினார்.
மலேசியப் பல்கலைக்கழகங்கள் உலகளாவிய தரவரிசைகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாகவும், இது கல்விச் சுதந்திரம் மற்றும் கற்பித்தல் தரத்தைப் பாதிப்பதாகவும் கல்வித்துறை ஆய்வாளரான ஷாரிஃபா முனிரா அலாதாஸ் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையிலேயே அஹ்மாட் மார்தாடா இந்த விளக்கத்தைத் தந்துள்ளார்.








