ஷா ஆலாம், நவம்பர்.07-
நாட்டில் ஆதரவற்ற இல்லங்களிலிருந்து 448 சிறார்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட அந்த இல்லங்களை வழிநடத்தி வந்த பிரதான நிறுவனமான GISB Holding நிறுவனத்தின் நிர்வாக தலைமை செயல்முறை அதிகாரி நசிருடின் அலி உட்பட அந்த நிறுவனத்தின் 22 முக்கியத் தலைவர்களுக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்தது.
சட்டத்தை மீறிய நிலையில் GISB Holding நிறுவனத்தை வழிநடத்தி வந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அதன் 22 தலைவர்களுக்கு எதிராக மும்மொழியப்பட்ட திருத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர்கள் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி லதிஃபா முகமட் தாஹார் இத்தீர்ப்பை வழங்கினார்.
இன்று காலையில் காஜாங் சிறைச்சாலைக் கட்டடத்தில் நடத்திய விசாரணையின் போது, 22 பேருக்கும் தண்டனையும், அபராதத்தையும் நீதிபதி லதிஃபா விதித்தார்.
13 ஆண்களுக்கு 15 மாதச் சிறைத் தண்டனையும், இதர ஒன்பது பெண்களுக்கு தலா 4,500 ரிங்கிட் அபராதமும் நீதிமன்றம் விதித்தது.
சட்டத்தை மீறிய நிலையில் அந்த அமைப்பின் மூலம் தவறான போதனையைச் சிறார்களுக்கு நடத்தி வந்ததாக இதற்கு முன்பு அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








