சுங்கை பட்டாணி, ஜனவரி.30-
சுங்கைபட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான தைப்பூசத் திருவிழாவின் போது, பொது இடங்களில் குப்பைகளை வீசுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்திகரிப்பு கழகமான SWCorp எச்சரித்துள்ளது.
இது குறித்து தேவஸ்தானத் தலைவர் பெ. இராஜேந்திரனைச் சந்தித்த SWCorp அதிகாரிகள், இம்முறை 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்தனர். குறிப்பாக, குப்பைகளை வீசுபவர்கள் ரகசிய கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு, அவர்களுக்கு உடனடி சம்மன் வழங்கப்படும்.
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, இக்குற்றத்தைப் புரிவோருக்கு, குறைந்தபட்சம் 500 முதல் 2,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமின்றி, நீதிமன்ற உத்தரவின்படி 12 மணிநேரச் சமூக சேவை செய்ய வேண்டியிருக்கும்.
தண்ணீர் பந்தல்கள் மற்றும் விழாக் காலக் கடைகளிலும் குப்பைகள் கண்டறியப்பட்டால் இதே கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதால், பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு இராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.
பக்தர்கள், காவடிகள் மற்றும் பால்குட ஊர்வலங்கள் வழக்கமான பாதைகளிலேயே செல்வதற்குச் சுங்கை பட்டாணி நகராண்மைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
பட்டாசுகள், வான வேடிக்கைகள் மற்றும் 'ட்ரோன்' (Drone) கேமராக்களைப் பயன்படுத்தக் காவல்துறை தடை விதித்துள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் கோல மூடா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹன்யான் பின் ரம்லான் தெரிவித்துள்ளார்.
பாடல்களைப் பெருத்த சத்தத்துடன் ஒலிக்கச் செய்து தேவஸ்தான வளாகத்திற்குள் நுழையும் லாரிகளுக்குத் தேவஸ்தான நிர்வாகம் தடை விதித்துள்ளது.
பக்தர்கள் தேவஸ்தானம் மற்றும் காவல்துறையின் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து, அமைதியான முறையில் முருகப் பெருமானை வழிபட ஒத்துழைப்பு நல்குமாறு தேவஸ்தானத் தலைவர் ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.








