கோலாலம்பூர், ஜூலை.18-
கடந்த செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையின் போது போலீசாரை நோக்கி, பாராங்கை ஏந்திய நிலையில் பலவந்தம் புரிந்ததாக வணிகர் ஒருவர் இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
43 வயது இஸாட் சைனி என்ற அந்த நபர், கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கோலாலம்பூர், டேசா பண்டான், சிம்பாங் தீகாவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வணிகத் தளங்களை அகற்ற மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள் முற்பட்ட போது சம்பந்தப்பட்ட வணிகர், பாராங்கை ஏந்திக் கொண்டு மிக மூர்க்கமாகச் செயல்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 353 பிரிவின் கீழ் அந்த வணிகர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








